ஜோதிடர், ஜோதிட ஆய்வாளர், ஜோதிட ஆசிரியர் , ஜோதிட ஆலோசகர்
இவர் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். 1995ல் இருந்து ஜோதிடத்தின் மேல் ஆர்வம் கொண்டு சுயமாக ஜோதிட புத்தகங்கள் வாசிக்க தொடங்கினார். பிறகு முறையாக இந்த அரிய ஜோதிட கலையை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 1997 இல் திருச்சி அருகே இருக்கும் சமயபுரம் மாகாளிகுடியில் இருக்கும் மூத்த ஜோதிட ஆசான் திரு.தாமோதரன் ஐயா அவர்களிடம் பாரம்பரிய ஜோதிட முறையை கற்றுத் தேர்ந்தார்.
அதன் பிறகு இந்த ஜோதிடத்தில் ஏதாவது புதுமையான முறை இருக்கிறதா என்ற தேடலில் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்ற புதுமையான மற்றும் துல்லியமான ஒரு முறை இருப்பதாக கேள்விப்பட்டு 1998ல் மதுரை மாநகரில் உள்ள ஜோதிட ஜாம்பவான் திரு. பொன்னையா சுவாமிகள் அவர்களிடம் KP ஜோதிட முறையை முறையாக கற்றுத் தேர்ந்தார்.
பிறகு சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், தன்னை நாடி வருபவர்களுக்கு ஜோதிடம் பார்த்து பலன் கூறி வந்தாலும் ஜோதிடம் சார்ந்த தேடுதலும், ஆன்மீகம் சார்ந்த புராண இதிகாசங்களையும் ஆய்வு செய்து கொண்டே இருந்தார்.
அதன் பிறகு ஜோதிடம் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவுமா? அனைத்து மனிதர்களும் தங்கள் தேவைகளை கைக்கொள்ள முடியுமா? வெற்றிக்கான சூட்சுமம் நம் மதங்களிலோ, இதிகாசங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டு இருக்கிறதா? அதை தெரிந்தோ தெரியாமலோ கையாளும் மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்கிறார்களா? என்ற தேடலில் பல மறைக்கப்பட்ட அரிய உண்மைகளை கண்டறிந்து அதை புத்தக வடிவில் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இவர் எந்த துறையில் இருந்தாலும் ஜோதிடத்தில் இருந்த தேடல் மட்டும் மாறியதே இல்லை. இவரின் தேடுதலின் உச்சமாக 2014ம் ஆண்டு “ஜோதிட நாஸ்டர்டாமஸ்” என்று அழைக்கப்படும் ஜோதிட ஜாம்பவான் திரு. நெல்லை K வசந்தன் ஐயா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவரை சந்தித்த நாள் முதல் அவர் அருகிலேயே இருக்கும் பாக்கியமும் இவருக்கு கிடைத்தது. ஜோதிடத்தின் அதிநவீன பரிணாமங்களை அவரிடம் இருந்து நாள்தோறும் கற்றுக் கொண்டார். திரு. நெல்லை K வசந்தன் ஐயாவின் அன்பையும், நம்பிக்கையும் இவர் முழுமையாக பெற்றார். அவரை சந்தித்த நாள் முதல் அவர் இறைவனடி சேர்ந்த 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் நாள் வரை அவருடன் இருந்து NKV SYSTEM என்ற மாபெரும் அரிய பொக்கிஷத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தார்.
திரு. நெல்லை K வசந்தன் அவர்களுடன் பல கோவில்களுக்கும், பல யாகங்களுக்கும், பல ஊர்களுக்கும் சென்று வந்த பாக்கியம் இவருக்கு கிடைத்தது. ஒவ்வொரு பயணத்திலும் பல புதுமையான விஷயங்களை இவர் கற்றுத் தேர்ந்தார்.
திரு. நெல்லை K வசந்தன் ஐயா இறைவனடி சேர்ந்த பிறகு அவர் வாழும் காலத்தில் தொடங்கிய NKV அகாடமியில் பேராசிரியராக பயணித்து வருகிறார். இவரிடம் கற்று தேர்ந்த பல நூறு மாணவர்கள் உலகம் முழுவதும் தங்கள் சேவைகளை செய்வதன் மூலம் NKV SYSTEM உலகம் முழுவதும் பரவலாக செல்வதற்க்கு துணை நிற்கிறார்கள்.